புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்யும் ஆடிட்டர்களின் விலகலுக்கான காரணங்களை தெரிவிக்குமாறு, சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்யும் பணியில் இருந்து ஆடிட்டர்கள் விலகுவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.புதிய கம்பெனிகள் சட்டம், கார்ப்பரேட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகளுக்கு, ஆடிட்டரையும் பொறுப்பாக்கி, அபராதமுடன், 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வகை செய்கிறது.இதன் காரணமாக, வர்த்தகம் மற்றும் நிதி விபரங்களை சரிவர அளிக்காத நிறுவனங்களை விட்டு, ஆடிட்டர்கள் வெளியேறுகின்றனர்.கடந்த மே மாதம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, 42 நிறுவனங்களில் இருந்து, ஆடிட்டர்கள் திடீரென விலகினர். இதையடுத்து, அந்த நிறுவனங்களில், நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா... ஆடிட்டர்கள் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை விசாரிக்குமாறு, மேற்கு மண்டல நிறுவனங்கள் பதிவாளர் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து, திடீரென அதிக அளவில் ஆடிட்டர்கள் வெளியேறி வருகின்றனர். அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு, அந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.அதில், விலகலுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்ளும் வகையில், 45 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு, நிறுவனங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். ஒரு நிறுவனத்தின் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளை அறிந்திருக்கும் ஆடிட்டருக்கு, அந்நிறுவனத்தின் நிதி தவறாக கையாளப்படுவது குறித்து எதுவுமே தெரியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது, உடனடியாக அது குறித்து நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க வேண்டியது, ஆடிட்டரின் கடமை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில், ஆடிட்டர் ஏன் தலையிடவில்லை என்ற கேள்வி எழுகிறது.அதனால், ஆடிட் நிறுவனங்கள், ஆடிட் குழு தலைவர்கள், தனி ஆடிட்டர்கள் ஆகியோரையும் அழைத்து, விலகலுக்கான காரணம் குறித்து விசாரிக்க, அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிறுவனங்கள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் நிதி நிலவரம் குறித்த வெளிப்படையான தகவல்களை அளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, ஆடிட்டருக்கு உள்ளது. அந்த தகவல்கள், உரிய கணக்கீட்டு நடைமுறைப்படி அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் உரிமையையும், சட்டம் வழங்குகிறது. அதனால், ஒரு நிறுவனத்தில் இருந்து ஆடிட்டர் விலகி, புதிய ஆடிட்டர் இணையும்போது, அதற்கான உண்மையான காரணத்தை, இரு தரப்பினரிடம் அறிந்து கொள்ள, அமைச்சகம் விரும்புகிறது. தற்போது, அதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், மன்பசந்த் பிவரேஜஸ், வக்ரங்கி, ஜெட் ஏர்வேஸ், எல் அண்டு டி கப்பல் பிரிவு, அட்லாண்டா, ஐநாக்ஸ் விண்டு உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து, ஆடிட்டர்கள் வெளியேறினர்.இதற்கு, நிறுவனங்கள் வெளிப்படையாக விபரங்களை தெரிவிக்காததே காரணம் என, கூறப்படுகிறது
THNAKS FOR THE
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42781&cat=1