Friday, June 29, 2018

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு: அமெரிக்கா மிரட்டல் எதிரொலி

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைகாலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரால் சில நாட்களாக ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு நேற்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பருக்குள் ஈரானிடம் இருந்து முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் அமெரிக்காவின் இந்த திடீர் மிரட்டலால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. ஆனால் புதன்கிழமை 36 காசுகள் மேலும் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. வியாழக்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 69.10 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு வரலாற்றில் இல்லாத சரிவாகும்.
நிலைமை சீரடையாவிடில் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 70 என்ற அளவுக்குக் கீழிறங்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
THANKS TO 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24277003.ece

No comments:

Post a Comment